அருமனை அருகே நட்பை துண்டித்ததால் ஆத்திரம் ஆசிரியையுடன் திருமணம் என போலி அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம்

* ஆசிட் வீசி கொன்று விடுவதாகவும் மிரட்டல் * வாலிபர் மீது வழக்கு

நாகர்கோவில்: அருமனை அருகே தன்னுடன் நட்பை துண்டித்த ஆசிரியையை, பழி வாங்கும் வகையில் அவருடன் திருமணம் என போலியாக அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் பைஜூகுமார் (26). இவருடன், அருமனை அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நட்பாக பழகி வந்தார். கல்லூரியில் படிக்கும் போதே இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இளம்பெண் தற்போது, அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பைஜூகுமார், நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் இருந்து இளம்பெண் விலகினார். அவரது நட்பை துண்டித்துள்ளார். ஆனால் பைஜூகுமார் தொடர்ந்து இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்தார். இது தொடர்பாக ஏற்கனவே அந்த இளம்பெண், தனது சகோதரரிடம் கூறினார்.  இதையடுத்து அருமனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, மனு ரசீது பதிவு செய்து பைஜூகுமாரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

ஆனால் பைஜூகுமார், இளம்பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லும் போதும், வரும் போதும் பின் தொடர்ந்து சென்று இடையூறு செய்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கேட்க வில்லை. இந்த நிலையில் திடீரென இளம்பெண்ணுக்கும், தனக்கும் வருகிற 25ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக பைஜூகுமார், போலியாக திருமண அழைப்பிதழ் அச்சடித்து நண்பர்களுக்கு வினியோகம் செய்தார். குறிப்பாக இளம்பெண்ணின் ஊரில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். இது பற்றி அறிந்ததும் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக பைஜூகுமாரிடம் கேட்ட போது, என்னுடன் நீ பழக வேண்டும். இல்லையென்றால்  உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டேன். ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்போலீசார் விசாரணை நடத்தி, தற்போது பைஜூகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: