தோழி வீட்டிற்கு ரம்ஜான் விருந்துக்கு சென்ற இடத்தில் கைவரிசை ₹1.45 லட்சம் வைர நகைகளை பிரியாணியுடன் விழுங்கிய நண்பர்: ஸ்கேன் செய்து டாக்டர்கள் உதவியுடன் நகையை மீட்ட போலீசார்

சென்னை: ரம்ஜான் விருந்துக்கு சென்ற இடத்தில், தோழி வீட்டில் ₹1.45 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை திருடி பிரியாணியுடன் விழுங்கிய நபரை போலீசார் ஸ்கேன் செய்து டாக்டர்கள் உதவியுடன் நகைகளை மீட்டனர். சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையைச் சேர்ந்தவர் தாட்சாயிணி (34). அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் பிரபல நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். ரம்ஜான் பண்டிகைக்கு தனது நகைக்கடையில் மேலாளராக வேலை செய்யும் தாரா என்பவரை தாட்சாயிணி வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். தோழி அழைப்பின் பேரில் தாரா தனது ஆண் நண்பரான சையத் முகமது அபுபக்கர் (27) என்பவருடன் கடந்த 3ம் தேதி தாட்சாயிணி வீட்டிற்கு சென்றார். அங்கு சுட சுட ரம்ஜான் பிரியாணி தாட்சாயிணி சமைத்து கொடுத்துள்ளார். பிறகு சுவையான பிரியாணியை தாரா மற்றும் அவரது ஆண் நண்பர் நன்றாக சாப்பிட்டனர். இதைதொடர்ந்து இருவரும் தனது வீட்டிற்கு வந்துவிட்டனர்.

பிரியாணி விருந்து முடிந்த பிறகு வெளியே செல்ல தாட்சாயிணி பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்த போது, ₹1.45 லட்சம் மதிப்புள்ள 3 செயின், வைர நகை ஒன்று மாயமாகி இருந்தது. தோழி மற்றும் அவரது ஆண் நண்பரை தவிர மற்ற வெளியாட்கள் யாரும் வீட்டிற்கு வரவில்லை. அப்படி இருக்க எப்படி நகைகள் மட்டும் மாயமாகி இருக்கும் என்று குழப்பத்தில் இருந்தார். பிறகு வேறு வழியின்றி பிரியாணி விருந்துக்கு வந்த தனது கடையின் மேலாளர் தாரா மற்றும் அவரது ஆண் நண்பரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் யாரும் நகையை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். ஆனால் தாராவின் ஆண் நண்பர் மீது தாட்சாயிணிக்கு சந்தேகம் வந்தது. இதுகுறித்து தாட்சாயிணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அபுபக்கரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீசார் சையத் முகமது அபுபக்கரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, தாட்சாயிணி வீட்டில் இருந்து மாயமான 3 செயின், வைர நகைகள் அனைத்து அவரது வயிற்றில் இருந்தது தெரியவந்தது. பிறகு மருத்துவர்கள் சையத் முகமது அபுபக்கருக்கு இனிமா கொடுத்து மலக்கழிவு வழியாக அனைத்து நகைகளையும் மீட்டு  தாட்சாயிணியிடம் ஒப்படைத்தனர்.

 குடிக்க பணம் தேவைப்பட்டதால் விருந்துக்கு சென்ற போது, தாட்சாயிணி மற்றும் தாரா ஆகியோர் சமையல் அறையில் இருக்கும் போது, பீரோவில் இருந்த நகைகளை எடுத்து பிரியாணியுடன் கலந்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் கழிவு மூலம் வெளியே வந்ததும் நகைகளை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சையத் முகமது அபுபக்கரை கைது செய்தனர். ஆனால் புகார் அளித்த தாட்சாயிணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கைது செய்யப்பட்ட நபரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். தோழி வீட்டில் ரம்ஜான் விருந்துக்கு சென்ற இடத்தில், ஆண் நண்பர் ஒருவர் நகைகளை திருடி பிரியாணியுடன் விழுக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைகளை பிரியாணியுடன் கலந்து சாப்பிட்டால், மறுநாள் கழிவு மூலம் வெளியே வந்ததும் நகைகளை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார்.

Related Stories: