ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து பாஜ மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவி நீதி சவுத்ரி தலைமையில் முதல்வர் ஜெகன் மோகனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:  ஆந்திர மாநிலத்தில் மக்கள் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என தெரியவில்லை. முதல்வர் ஜெகன் மோகன் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து ஆந்திர மாநிலத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் அதிகரித்துள்ளது. அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 31 பலாத்காரம் நடைபெற்றுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. 5 வயது குழந்தை முதல் 65 வயது மூதாட்டி வரை உள்ள பெண்கள் மீது பலாத்காரம் சம்பவம் நடந்துள்ளது இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார், அமைச்சர்கள், மகளிர் கமிஷனர்கள் சம்பவ இடத்திற்கு வருவது பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடல் நலம் விசாரிப்பது. அவர்களுக்கு ஒரு லட்சம் முதல் ₹5 லட்சம் வரை நிவாரண உதவி வழங்குவது, உங்களுக்கு பக்கபலமாக அரசு உள்ளது என தெரிவிப்பது. இதுதான் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் நடைபெற்றுவருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. பலாத்கார செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சுதந்திரமாக திரிந்து வருகிறார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியினர் நெருக்கடி தருவதால் போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்கள். அதேபோல் கடந்த வாரம் குண்டூர் மாவட்டம், ரே பள்ளி ரயில் நிலையத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் நள்ளிரவில் ரயில்நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்ல இறங்கினார்கள். ரயில் நிலையத்தில் இருந்த மூன்று மர்ம நபர்கள் கணவனை தாக்கி அவரது கண் எதிரே மனைவியை பலாத்காரம் செய்தார்கள். இதுவரை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை.

அதேபோல் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபரை உயர்வகுப்பை சேர்ந்த ஒரு பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கீழ் வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதாக மேல் வகுப்பை சேர்ந்த பெண்ணின் அண்ணன் மற்றும் தந்தை ஆகிய இருவரும் இரண்டு பேரையும் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், கீழ் வகுப்பைச் சேர்ந்த நபரின் ஆணுறுப்பை துண்டித்து உள்ளார்கள். இதுபோன்ற செயல்கள் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அதேபோல் போதைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் சீரழிந்து வருகிறார்கள். எனவே, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வரை ஆந்திர மாநில பா ஜ சார்பில் மகளிர் அணி தலைமையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் எம்பி துர்கா ராமகிருஷ்ணா, கட்சி மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி பல்லவி, மாவட்ட செயலாளர் டில்லி ராணி, கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சிட்டிபாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  தலைவர் குரு கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: