அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளில் சூறைக்காற்றுடன் டெல்டாவில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன

திருச்சி: தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில், வெயில் கொளுத்தியது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மாலை சுமார் 30 நிமிடங்கள் இடியுடன் கன மழை பெய்தது.  கூத்தாநல்லூர் அருகே கமலாபுரத்தில் மின்னல் தாக்கியதில், தேவேந்திரன்(62) என்பவரது கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதேபோல், வடபாதிமங்கலத்தில் மின்னல் தாக்கியதில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான 2 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. கரூர், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்றிரவு 7.45 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் வெளுத்துக்கொட்டியது. தொடர்ந்து இரவு வரை தூறிக்கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

பெரம்பலூரில் மாலை 6.45மணி முதல் இரவு 8 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நகர் மற்றும் கிராமப்புறங்களில் 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பல இடங்களில்  மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள்  அவதியடைந்தனர். அரியலூரில் மாலை 4 மணியளவில்   கருமேகங்கள் சூழ்ந்தன. ஆனால் மழை பெய்யவில்லை. இருப்பினும் அரியலூரை  சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.புதுக்கோட்டையில் இரவு 8 மணி அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சாலையில் கிடந்த குப்பைகள், புழுதிகள் பறந்தன. இரவு 8.20 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.  பொன்னமராவதி, விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்பட மாவட்டத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடி, மின்னல்  பலமாக இருந்தது. திருச்சி மாநகரில் மாலை 6 மணிக்கு பலத்த காற்றுடன் துவங்கிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இடையிடையே இடிமின்னலும் மிரட்டியது. காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. கரூர் பைபாஸ் சாலையில் மரம், மின்கம்பம் சாய்ந்து  விழுந்ததில் 2 கார்கள் சேதமடைந்தது. சோமரசம்பேட்டையில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு  சாய்ந்தது. திருச்சி மாநகர் மட்டுமின்றி தா.பேட்டை,  கல்லக்குடி, சமயபுரம், லால்குடி, மணப்பாறை, மருங்காபுரி, முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்தது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மழை காரணமாக இரவில் குளிர்ந்த சூழல் நிலவியது.

Related Stories: