குஜிலியம்பாறை அருகே சாலையோரம் திறந்தவெளி கிணறு: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டையில் இருந்து பெருமாள்கோவில்பட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான சுமார் 100 அடி ஆழம் கொண்ட திறந்தவெளி பாசன கிணறு ஒன்று உள்ளது. இச்சாலை வழியே பொதுமக்கள், வாகனஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர் கடந்து சென்று வந்தனர். இதனால் இச்சாலையில் பாதுகாப்பு கருதி, அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில் பெருமாள்கோவில்பட்டியில் அமைக்கப்பட்ட போர்வெல்லில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, இச்சாலையில் கட்டிய தடுப்புச்சுவரை ஒட்டியவாறு லந்தக்கோட்டை ஊராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு கஜா புயலில் ஏற்பட்ட பலத்த மழையால் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு தடுப்புச்சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் இச்சாலையில் தடுப்புச்சுவர் இல்லாமல், திறந்தவெளியில் கிணறு உள்ளது. இதனால் இச்சாலையை கடந்து செல்வோர் ஒருவித உயிர்பயம் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், திறந்தவெளி கிணறு அமைந்துள்ள சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என லந்தக்கோட்டை ஊராட்சி நிர்வாகம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தோம். ஆனால் தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில், இரும்பு பைப்புகளை மட்டுமே வைத்து தடுப்பு அமைத்துள்ளனர்.இது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இச்சாலையில் வாகனங்கள் கடந்து செல்லும் போது, விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன்பு இச்சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: