விடுமுறை தினத்தால் பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

பழநி: விடுமுறை தினம் காரணமாக பழநி கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.ரம்ஜான் பண்டிகை காரணமாக கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் 4 நாட்கள் தொடர் விடுமுறை விட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. ரம்ஜான் தினமான நேற்று தமிழக பக்தர்களின் வருகையும் அதிகளவு இருந்தது. இதனால் வின்ச், ரோப்கார் நிலையங்களில் ரோடு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலைக்கோயில் அன்னதானத்திலும் பக்தர்கள் காத்திருந்து உணவருந்தும் நிலை ஏற்பட்டது. பக்தர்கள் வந்த வாகனம் கிரிவீதி முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் வின்ச், ரோப்கார் நிலையங்களின் அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: