உளுந்தூர்பேட்டை அருகே 5 கூரை வீடுகள் எரிந்து நாசம் ₹ 10 லட்சம் பொருட்கள் சேதம்

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசமானது. வீடுகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் தீயில் கருகின.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ காற்றில் வேகமாக பரவி எரிய ஆரம்பித்து அருகில் உள்ள கனகவள்ளி, மணிகண்டன் ஆகியோரின் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது.அப்போது ஒரு வீட்டில் இருந்த இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அக்கம், பக்கம் உள்ளவர்கள் அலறி அடித்து ஓடத்துவங்கினர். அப்போது தீ வேகமாக பரவி ராசு, வெங்கடேசன் ஆகியோரது கூரை வீடும் தீப்பிடித்து எரிந்தது.

 இந்த தீவிபத்து குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் திருநாவலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலும், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலும் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு குழுவினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 5 வீடுகளிலும் இருந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான துணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தீவிபத்தில் வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசின் மூலம் புதிய வீடுகள் கட்டித்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: