சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த  எலப்பாக்கம் கிராமத்தில் சின்மய விநாயகர், பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை கிருத்திகையில், பால் காவடி திருவிழா நடப்பது வழக்கம். இதையொட்டி, 62ம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால்காவடி பெருவிழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் விழா துவங்கி, கால பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், இரவு முருகப் பெருமான், வள்ளி, தெய்வயானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேற்று காலை மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், காவடி திருக்கோலம் சென்று நீராடி வருதல், கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து  பக்தர்கள் பால், புஷ்பம், வேல் காவடிகள் எடுத்து, அலகு குத்தி வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி,  பாலமுருகனுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டு  தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி, பக்தி நாடகம், நையாண்டி மேளம், கரகாட்டம் நிகழ்ச்சியுடன்  பாலமுருகன் பக்தர்களிடையே எழுந்தருளி திருவீதி வந்தார். விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, அச்சிறுப்பாக்கம் அடுத்த பெரும்பேறு கண்டிகை கிராமத்தின் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் 64வது ஆண்டு  திருப்படி திருவிழா நடந்தது.  காலையில் வள்ளி, தெய்வானை, சமேத சிவ சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை, கோ பூஜை,  சேவல்கொடி உயர்த்துதல் நடந்தன. இதில் மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து படிகளுக்கு பக்தர்கள் பூஜை செய்தனர். கோயில் மலை மீது பஜனை பாடல்களும், முருகன் பக்திப் பாடல்களுடன் கூடிய கச்சேரிகள் நடந்தது.

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சித்திரை கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் பரணி அன்று மாலை முதல் ஏராளமான பக்தர்கள் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், பஸ், வேன்களில் வந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிருத்திகை தின தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கோயிலை ஒட்டி உள்ள சரவணப் பொய்கையில் நீராடி மொட்டை அடித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து மாட வீதிகளில் உலா வந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

Related Stories: