கிருமாம்பாக்கம் ரவுடியை கொல்ல முயன்றது ஏன்?கூட்டாளி பரபரப்பு வாக்குமூலம்

பாகூர் :  புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அமுதன் (34). இவர் மீது பிள்ளையார்குப்பம் முன்னாள் கவுன்சிலர் வீரப்பன், அவரது மைத்துனர் சாம்பசிவம் ஆகியோரை கொலை செய்த வழக்கு, ஏனாம் சிறைக்குள் அத்துமீறி நுழைந்து ரவுடியை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.  

இந்நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே உள்ள அமுதன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் நீதிமன்றத்தில் வீரப்பன் கொலை வழக்கில்  ஆஜராகிவிட்டு, புதுச்சேரி கிருமாம்பாக்கம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது,  பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமுதனை வெட்டினர். இதில், படுகாயமடைந்த நிலையில் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் அமுதன் தஞ்சமடைந்தார். அவரை போலீசார் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கிருமாம்பாக்கம் அய்யனார் கோயில் பின்புறம் பதுங்கிருந்த புகழ் மற்றும் வார்க்கால் ஓடை தினேஷ் (22) ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதில், புகழ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:

பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ரவுடி அமுதன், கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி புகழ் (எ) புகழேந்தி (27)  என்பவருடன் இணைந்து  வீரப்பன் மற்றும் அவரது மைத்துனரையும் வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் போதே அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, அமுதன் ஒரு தரப்பாகவும், புகழ்  வேறொரு தரப்பாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். சமீபத்தில், அவர்களுக்குள் தொழில் போட்டி காரணமாக பிரச்னை மேலும் தீவிரமானது.

இந்நிலையில் புகழ், கரிக்கலாம்பாக்கம் ஜோஸ் அய்யனார், கடலூர் தங்கபாண்டியன் ஆகிய ரவுடிகளுடன் சேர்ந்து கூலிப்படை மூலமாக அமுதனை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளதும், அதில் அமுதன் தப்பித்து காவல்நிலையத்தில் தஞ்சமடைந்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: