சிவசேனாவினர் மீது வாளால் தாக்குதல் பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச்சூடு

பாட்டியாலா: பஞ்சாப்பில் காலிஸ்தான் அமைப்பினர் நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்கள், வாள்களை கொண்டு பயங்கரமாக தாக்கி கொண்டனர்.காலிஸ்தான் நிறுவன நாளை ஏப்ரல் 29ம் தேதி, இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் கடைபிடிக்கின்றனர். இதை முன்னிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள கலெக்டர், எஸ்பி அலுவலகங்களின் மீது காலிஸ்தான் கொடி ஏற்றப்படும் என்று காலிஸ்தான் தீவிரவாதியான குர்பகத்வந்த் சிங் பன்னு அறிவித்து இருந்தான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் சிவசேனா கட்சியினரும், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியினரும் பாட்டியாலாவில் காலிஸ்தான் எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என அறிவித்தனர்.

அதன்படி, பாட்டியாலாவில் உள்ள காளி தேவி கோயில் அருகே சிவசேனாவினர் பேரணி நடத்தினர். அதே நேரம், காலிஸ்தான் ஆதரவாளர்களும் இங்கு அனுமதியின்றி பேரணி நடத்த முயன்றனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் கைகளில் இருந்த வாள்களுடன்  தாக்குதலில் ஈடுபட்டனர். சிவசேனா கட்சியினர் கற்களை வீசி தாக்கினர். காவல்துறையினர் அவர்களை கலைக்க முயன்றனர். எனினும், கூட்டம் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதல் சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து முதல்வர் பகவந்த் சிங் மான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாட்டியாலா  மோதல்  சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கிறோம். அமைதியை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்,’ என்றார்.

Related Stories: