இந்தி இந்தியாவின் தேசிய மொழியா? ஒன்றிய அரசுக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு முதல்வர் மம்தா கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும்’ என்றார். இதற்கு தமிழகம் உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த கருத்திற்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளிக்கையில், ‘இந்தி மொழி குறித்து கூட்டாக முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சிகளின் முதல்வர்களுடன் விவாதிக்க உள்ளேன். இந்த நாடு பல்வேறு மொழிகள் மற்றும் தாய்மொழிகளைக் கொண்ட பரந்த நாடு. இந்தி மொழி குறித்து எதுவும் கருத்து சொல்லப் போவதில்லை; ஏனென்றால் மற்ற மாநில முதல்வர்களுடன் நான் விவாதிக்க வேண்டும். இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியா? என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும்’ என்றார். இந்நிலையில் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்திக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: