டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

ஆனைமலை :  கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி பகுதியில் வனத்துறை சார்பில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், 71 வயதான விஜயலட்சுமி என்ற யானை டாப்சிலிப் அருகே உள்ள பணத்தாறு என்ற வனப்பகுதியில் இருந்து கடந்த 1973ம் ஆண்டு மீட்கப்பட்டு சுமார் 49 ஆண்டுகளாக வனத்துறை பராமரிப்பில் இருந்து வந்தது. வயது முதிர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 27ம் தேதி விஜயலட்சுமி யானை உயிரிழந்தது. இதையடுத்து, யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் விஜயன், உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம், வனவர் சேகர் ஆகியோர் முன்னிலையில் வன கால்நடை மருத்துவர் சுகுமார் உடற்கூறு ஆய்வு நடத்தி, யானையின் உறுப்புகளை பரிசோதனைக்காக எடுத்தார். இதன்பின்னர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் யானை பாகன்கள் இணைந்து முழு அரசு மரியாதையுடன் விஜயலட்சுமி யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: