மபி எதிர்க்கட்சி தலைவர் கமல்நாத் பதவி விலகல்

போபால்: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பாஜ கவிழ்த்தது. தற்போது அங்கு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கையான `ஒருவருக்கு ஒரு பதவி’ என்பதின் அடிப்படையில், மத்திய பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், மாநில காங்கிரஸ் தலைவர் என இரு வேறுபதவிகளை வகித்து வந்த கமல்நாத், நேற்று தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக மட்டும் நீடிக்க உள்ளார்.

அவருக்கு பதிலாக பிந்த் மாவட்டத்தில் உள்ள லாகர் தொகுதியில் இருந்து 7 முறை காங்கிரஸ் எம்எல்ஏ.வாக தேர்வான கோவிந்த் சிங், சட்டப்பேரவை புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கமல்நாத்துக்கு அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச்செயலாளர் கேசி. வேணுகோபால் அனுப்பிய கடிதத்தில், கமல்நாத்தின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ஏற்றுக் கொண்டதாகவும் உடனடியாக பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கமல்நாத் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வராகவும், ஒன்றிய அரசின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Related Stories: