குரோம்பேட்டை-திருநீர்மலை-திருமுடிவாக்கம் சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘குரோம்பேட்டை பான்ஸ் கம்பெனி ரயில்வே மேம்பால பகுதியில் இருந்து திருநீர்மலை சாலை - திருமுடிவாக்கம் சாலை 7 கிலோ மீட்டரில் உள்ளது. இருவழி சாலையாக இருக்கின்ற காரணத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில், சிட்கோ தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாக உள்ளதால், அந்த பகுதியை கடந்து செல்ல ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, குரோம்பேட்டை-திருநீர்மலை-திருமுடிவாக்கம் சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும்,’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘மேற்கண்ட சாலை ஆன்மிக பெருமக்கள் பயன்படுத்தும் சாலையாக இருக்கிறது. மேலும், அங்கு சிட்கோ தொழிற்சாலை இருப்பதால் தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்த சாலையை பயன்படுத்தும் நிலை இருக்கிறது.  எனவே, நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, சம்பந்தப்பட்ட கோட்ட பொறியாளரை அழைத்து அந்த சாலையை எந்த அளவுக்கு விரிவுபடுத்த முடியும் என ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறேன்.

அதன்அடிப்படையில், அந்த சாலையை அகலப்படுத்த இந்த அரசு முயற்சி எடுக்கும்,’ என்றார்.

Related Stories: