கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய சிறுத்தை குட்டி வனத்தில் விடுவிப்பு

கூடலூர்: கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிக்கிய சிறுத்தை குட்டி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பொழம்பட்டி என்னுமிடத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி ஒன்று தனியாக இருப்பதை அப்பகுதியில் பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து உள்ளனர்.

 பின்னர் இது குறித்து தோட்ட நிர்வாகத்தின் மூலம் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் சுமார் ஒன்றரை மாத வயதுள்ள சிறுத்தை குட்டியை கைப்பற்றினர். தேயிலை தோட்டத்தை ஒட்டி சிறிய காடு இருப்பதால் தாய் சிறுத்தை அப்பகுதியில் இருக்கலாம் எனவும், சிறுத்தை குட்டியை அப்பகுதியில் விட்டுவிட்டால் தாய் சிறுத்தை அதனை எடுத்துச் சென்றுவிடும் என்றும், இதற்காக குட்டியை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் யாரும் நடமாடக்கூடாது என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: