ஆசியாவிலேயே முதன்முதலாக கட்டப்பட்ட நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் கனரக வாகனங்களால் சேதமடையும் அவலம்

நெல்லை : ஆசியாவிலே முதன்முறையாக நெல்லையில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலமானது, அதிவேகமாகச் செல்லும் கனரக வாகனங்களால் சேதமடையும் அவலம் தொடர்கிறது. இதைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் நெல்லை - திருச்செந்தூர், செங்கேட்டை ரயில்வே தண்டவாளத்தின் கீழ் பகுதியில் ஆசியாவிலேயே முதலாவதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுதியையும் இணைக்கும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தபாலத்தை கடந்துதான் நெல்லை, தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் மற்றும் மரத்தடிகள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

 தினமும் அதிகப்படியான வாகனங்கள் ஈரடுக்கு மேம்பாலத்தில் பயணித்து வருகின்றன. கீழ்பாலத்தில் பாதசாரிகள், இரு சக்கர வாகனம், ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து செங்கோட்டை, திரு்ச்செந்தூர் ரயில்வே தண்டவாளத்தை கடந்துதா்ன் 48 ஆண்டுகளுக்கு முன் வாகன போக்குவரத்து இருந்துள்ளது. இதைத் தவிர்க்கும்பொருட்டும், வாகனங்கள் தாமதம் இன்றி செல்லவும் 1969ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி சந்திப்பு பகுதியையும் டவுன் பகுதியை இணைக்கும் வகையில் ரயில்வே தண்டவாளத்தின் மீது ஆசியாவிலேயே முதன்முதலாக ஈரடுக்கு மேம்பாலத்தை சுமார் ரூ.47 லட்சம் செலவில் அமைத்து கொடுத்தார்.

1973ம் ஆண்டு நவ. 13ல் மக்கள் பயன்பட்டுக்கு அவர் திறந்து வைத்து பாலத்துக்கு திருவள்ளூவர் ஈரடுக்கு மேம்பாலம் எனவும் பெயர் சூட்டினார். இப்பாலம் 700 மீ நீளத்திலும் 8 மீ அகலத்தில் அமைந்துள்ளது. தற்போது 49 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக அரை நூற்றாண்டை கடக்க காத்திருக்கும் நெல்லை மாவட்டத்தின் அடையாளமாக திகழும் ஈரடுக்கு மேம்பாலம்  பாலத்தில் அதிவேகமாகச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால் சேதமடையும் அவலம் தொடர்கிறது. குறிப்பாக பாலத்தின் கைப்பிடி சுவர்கள் அடிக்கடி சேதடைகின்றன. சில இடங்களில் கைப்பிடி சுவர்கள் விரிசல் அடைந்துள்ளன.

 மேம்பாலத்தின் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ளன. இப்பாலத்தில் எதிர் எதிரே பயணிக்கும் வாகனங்கள் சில நேரங்களில் ஆபத்தான  இந்த குண்டு, குழிகளில் விழுந்து செல்லும் நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். கீழ் பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாகனங்கள் ஏறி, இறங்கி செல்லும் சாலைகள் மிக மோசமாக காணப்படுகின்றன. எனவே, மேம்பாலத்தின் கைப்பிடி சுவர், பக்கவாட்டுகளில் சேதமடைந்த சுவர்களை சீரமைத்து புகழ்வாய்ந்த ஈரடுக்கு மேம்பாலத்தை பாதுகாக்க வேண்டும்.

 மேம்பாலத்தின் கீழ்ப்பாலத்தில் மழைகாலங்களில் மழைநீர் தேங்கி வாரக்கணக்கில் தண்ணீர் வடியாமல் காணப்படும். மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கீழ்பாலத்தை நாடிவரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தட்டு தடுமாறி செல்வதாகவும், சரக்கு ரயில்களில் இருந்து உணவுப் பொருட்கள், உரமூடைகளை கொண்டு செல்லும் வாகன ஓட்டிளும் கீழ்பாலத்தின் இருபுறத்திலும் அதிக எடைகளை ஏற்றிக்கொண்டு வர முடியாத நிலையில் மழைகாலத்தில் லாரிகள் டயர்கள் பதிந்து விடுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஈரடுக்கு மேம்பாலம், கீழ் பாலத்தை சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: