திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்-நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. அதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

இந்த முகாமில், 21 வகையான மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் நேரில் வந்து, தங்களுக்கான தேசிய அடையாள அட்டை புதிதாக பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பம் அளித்தனர். அடையாள அட்டை அடிப்படையில், உதவித்ெதாகை, உதவி உபகரணங்கள் பெற முடியும் என்பதால் அதிக ஆர்வத்துடன் மாற்றுத்திறனாளிகள் திரண்டிருந்தனர்.

அதையொட்டி, மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புத் தன்மைகளை பரிசோதித்து, அதற்கு தகுந்தபடி பாதிப்பு சதவீத சான்றுகளை மருத்துவக் குழுவினர் அளித்தனர். விபத்தினால் உடல் உறுப்புகளை இழந்த சிலரும் மாற்றுத்திறனாளிகள் என அடையாள அட்டை வழங்க வேண்டும் என விண்ணப்பித்தனர். ஆனால், சிகிச்சையால் குணமாகும் பாதிப்புகளுக்கு சான்று வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் உரிய இணைப்பு சான்றுகளை கொண்டுவராததால் திருப்பி அனுப்பபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 3 மணி வரை நடந்தது. அதனால், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கும் நிலை காணப்பட்டது.

Related Stories: