கராச்சி பல்கலை.யில் குண்டுவெடிப்பு 3 சீனர்கள் உள்பட 4 பேர் பலி: மனிதகுண்டு தாக்குதல் என சந்தேகம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சீனாவைச் சேர்ந்த 3 பேர் உட்பட நான்கு பேர் பலியாகினர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக் கழகத்தில் சீன மொழியை பயிற்றுவிக்கும் கன்பூஷியஸ் நிறுவனக் கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனில் இருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்ததில் 4 பேர் பலியாகினர். வேனுக்கு அருகில் நின்றிருந்த அதிகாரிகள் 4 பேர் உள்பட பலர் காயமடைந்தனர்.

இதில், கன்பூஷியஸ் நிறுவன இயக்குநர் ஹூவாங் குய்பிங், டிங் முபெங், சென்சா உள்ளிட்ட 3 சீனர்கள் பலியாகினர். இவர்களில் 2 பேர் பெண்கள். சீனர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் சீனர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று பாகிஸ்தான் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்டமாக பல்கலை. நுழைவு வாயில் அருகே வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்தது. சம்பவ இடத்துக்கு வந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கராச்சி பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவ மஜீத் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: