மதுரையில் மேம்பாலம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி

மதுரை: மதுரையில் மேம்பாலத்தின் இணைப்பு பகுதி இடிந்து விழுந்து தொழிலாளி பலியான  சம்பவம் தொடர்பாக, ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி  அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுரை - நத்தம் இடையே ரூ.416 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த  2018ல் துவங்கியது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை  தல்லாகுளத்தில் இருந்து திருப்பாலை வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு கூடுதலாக  ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.

கடந்தாண்டு ஆக. 28ம் தேதி பாலத்தில், கர்டரை பொருத்தும்  பணி நடந்தது. அப்போது ஹைட்ராலிக் கிரேன் முறிந்து விழுந்ததால் கர்டர்,  சரிவர பொருத்தப்படாத நிலையில் பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி, உ.பி  தொழிலாளி ஆகாஷ் சிங் (27) சம்பவ இடத்திலேயே பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

120  டன் எடை கொண்ட பாலத்தின் இணைப்பு பகுதியை 200 டன் திறன் கொண்ட ஹைட்ராலிக்  இயந்திரம் மூலம் தூக்கி கட்டமைக்க வேண்டும். ஆனால் 120 டன் திறன் கொண்ட  ஹைட்ராலிக் மூலம் கட்டமைக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்திற்கான  காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர்  தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து விரிவான  ஆய்வறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் தாக்கல்  செய்தனர். அந்த அறிக்கையில், ‘‘ஹைட்ராலிக் இயந்திரத்தில்  ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பயன்படுத்தியது, கர்டர் பொருத்தும் பணியின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்கள்  இல்லாதது ஆகியவையே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

விபத்து  தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு  பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின் சம்பவ  இடத்தில் பணியில் இல்லாத மேலும் 2 கண்காணிப்பு பொறியாளர்கள் பணிநீக்கம்  செய்யப்பட்டனர். இதையடுத்து நிபுணர் குழு அறிக்கையின்படி, விபத்துக்கு காரணமான ஒப்பந்த நிறுவனமான ஜேஎம்சி புராஜக்ட்ஸ்  இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதமும்,  கட்டுமான ஆலோசனை  நிறுவனத்திற்கு ரூ.40 லட்சம் அபராதமும் விதித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: