மயிலம் பகுதியில் கத்தி முனையில் வழிப்பறி செய்த சென்னை வாலிபர்: அதிரடி கைது

திண்டிவனம்: மயிலம் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதிகளில் இரவு மற்றும் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெறுவதும், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து கத்திமுனையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதும் தொடர்கதையாக உள்ளது. இதேபோல் நேற்று மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்டூர் ஆலமரம் அருகே செண்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் ஆனந்தசெல்வன் (38) என்பவர் தனது நிலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருவதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஆனந்த செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி வைத்திருக்கும் பணத்தை எடு என கூறி உள்ளார். அப்போது அவரிடம் பணம் இல்லாததை அறிந்த மர்ம நபர் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.  இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் போலீசார் விளங்கம்பாடி பகுதியில் ரோந்து சென்றபோது அதிவேகமாக வந்த பைக்கை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னை புளியந்தோப்பு 5வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சரத்குமார் (20) என்பதும் ஆனந்த செல்வனிடம் கத்திமுனையில் செல்போன் பறித்து சென்றதும் அப்பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார் சரத்குமாரை கைது செய்தனர்.

Related Stories: