வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆயுதப்படை போலீசாரின் புகார்களை தெரிவிக்க பெட்டி-ஏடிஎஸ்பி தலைமையில் குறைதீர்வு கூட்டம்

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆயுதப்படை போலீசார் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில், புகார் பெட்டிகள் வைக்கப்படும் என்று ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வார விடுமுறை, பணி ஒதுக்கீடு செய்வது, சில போலீசார் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுவது போன்றவை குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து குறைதீர்வு கூட்டம் வேலூர் ஆயுதப்படை ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண், பெண் போலீசார் என மொத்தம் 222 பேர் கலந்து கொண்டனர். அப்போது தனித்தனியாக போலீசாரிடம் குறைதீர்வு மனுக்களை பெற்றனர். பெரும்பாலான போலீசார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு அறிவித்தப்படி வார விடுமுறை அளிப்பது இல்லை. ஒரே பணியிடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணியிடமாற்றம் செய்து சூழ்ச்சி முறையில் பணி வழங்க வேண்டும். கார்டு டூட்டியில் 2 முதல் 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அங்கு 5 பேர் நியமனம் செய்ய வேண்டும். பணி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டக்கூடாது.

குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல தனியாக வாகனம் வழங்க வேண்டும். பஸ்களில் அழைத்து செல்வதால் பெரும் அவதிக்கு ஆளாக வேண்டி உள்ளது. ஆயுதப்படையில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளதால் தற்காலிகமாக காவல் நிலையங்களுக்கு அனுப்பிவர்களை மீண்டும் ஆயுதப்படைக்கு திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைளை அடங்கிய மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை டிஸ்பி மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து, ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி கூறியதாவது:

ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண், பெண் போலீசாருக்கு குறைதீர்வு கூட்டம் நடத்தி அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்டுள்ள மனுக்களில் பெரும்பாலும் வார விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  இவர்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் வேலூர் ஆயுதப்படை அலுவலகத்தில் இரு புகார் பெட்டி அமைக்கப்படும். அந்த பெட்டியில் இருக்கும் மனுக்களை தினந்தோறும் எஸ்பி அலுவலகத்தில் இருந்து வரும் அலுவலர்கள் எடுத்து செல்வார்கள். இந்த மனுக்கள் நேரடியாக எஸ்பியின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். வாரந்தோறும் இனி காவத்து பயிற்சி நடக்கும். போலீசார்களின் குறைகளை களைய அனைத்து நடவடிக்கை எடுப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: