குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்: அமைச்சர்கள் பங்கேற்பு

குன்றத்தூர்: குன்றத்தூரில் உள்ள முருகன் கோயிலில் நாளை (25ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் மிகப் பழமையான, வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோயில் உள்ளது. இது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் தமிழக அரசு நிதி ஒதுக்கியது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், குன்றத்தூர் முருகன் கோயிலில் நாளை (25ம் தேதி) காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களின் வசதிக்காக கோயிலை சுற்றிலும் 3 இடங்களில் குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை மற்றும பல்வேறு புறநகர் பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்காக தாம்பரம், பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல் ஆகிய மாநகர பணிமனைகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இக்கும்பாபிஷேகத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் நடத்தி வைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்பட எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட எஸ்பி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் விழாக்குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, கோயில் நிர்வாக அதிகாரி அமுதா உள்பட வி.ஆர். வெங்கடாசலம், கே.டி.வெங்கடேசன், தனசேகரன், பக்தவச்சலம், குணசேகர், ஜெயக்குமார், தி.வே.சரவணன், வே.கார்த்திகேயன், சங்கீதா கார்த்திகேயன் ஆகிய விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related Stories: