தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி..!

ஜெனிவா: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

பாக்ஸ்லோவிட் என்ற இந்த மாத்திரையை தீவிர கொரோனா தொற்று உள்ளவர்கள், தடுப்பூசி செலுத்தாதாவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம். பாக்ஸ்லோவிட் மாத்திரை என்பது 2 நிர்மாட்ரெல்விர், ஒரு ரிடோனாவிர் மாத்திரையாகும். இந்த மாத்திரையை 5 நாட்களுக்கு காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 5 நாட்களுக்கு மேல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் எடுக்கக் கூடாது. இந்த பாக்ஸ்லோவிட் மாத்திரையில் நிர்மாட்ரெல்விர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகள் உள்ளன. இதில் நிர்மாட்ரெல்விர் மருந்து கொரோனா வைரஸ் தனது புரதத்தை பிரதி எடுக்கவிடாமல் தடுக்கும். நிர்மாட்ரெல்விர் மாத்திரை புரதத்தைத் தடுத்து நிறுத்தியதை நீண்ட நாட்களுக்குச் செயல்பட வைக்கும்.

கொரோனாவால் அதிக ஆபத்துள்ள நபர்கள் மாத்திரையை உட்கொண்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து 85% குறைக்கப்படுகிறது. ஃபைசர் மற்றும் மருந்துகளின் காப்புரிமை குழுவிற்கு இடையேயான உரிம ஒப்பந்தம், மருந்தின் பொதுவான உற்பத்தியிலிருந்து பயனடையக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, விலை நிர்ணயம் மற்றும் ஒப்பந்தங்களை மிகவும் வெளிப்படையானதாக பைசர் நிறுவனம் மாற்ற வேண்டும் மற்றும் மருந்து காப்புரிமைக் குழுவுடன் அதன் உரிமத்தின் புவியியல் நோக்கத்தை பெரிதாக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இதனால் அதிகமான பொதுவான உற்பத்தியாளர்கள் மருந்தை உற்பத்தி செய்ய தொடங்கலாம் மற்றும் மலிவு விலையில் விரைவாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: