ஆந்திராவில் இருந்து வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 147 கிலோ கஞ்சா பறிமுதல்-போலீசார் அதிரடி

வேதாரண்யம் : ஆந்திராவில் இருந்து வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சொகுசு கார்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்ததில், அதில் பண்டல் பண்டல்களாக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து பகுதியை சேர்ந்த சரபோஜி, நாகையை சேர்ந்த இளமாறன், மதுரையை சேர்ந்த பரமன், உசிலம்பட்டியை சேர்ந்த போதுராஜா என்றும், ஆந்திராவில் இருந்து வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 147 கிலோ கஞ்சா, 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாகை எஸ்.பி., ஜவகர், பிடிபட்ட கஞ்சா, 2 சொகுசு கார்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வேதாரண்யம் டிஎஸ்பி., முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: