குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது போல் புதிய கல்வி கொள்கை நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்: ஈரோட்டில் கி.வீரமணி பேச்சு

ஈரோடு: குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டதுபோல் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வும் ஒழிக்கப்பட வேண்டும் என ஈரோட்டில் நடந்த பரப்புரையில் கி.வீரமணி பேசினார். திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பிரசார பயண பொதுக் கூட்டம் ஈரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: மனுதர்மத்தை 102 ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றிய பெருமை திராவிட இயக்கங்களுக்கு உண்டு. அப்போது சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் எனும் நிலை இருந்தது. அதிலும் சமஸ்கிருதத்தை பிராமணர்கள் மட்டும் தான் படிக்க முடியும் எனும் நிலை இருந்தது. அதேபோல இப்போது ஒரு நிலையை நீட் எனும் தேர்வின் மூலம் கொண்டு வந்துள்ளனர்.

நீட் தேர்வின் மூலம் நம் பிள்ளைகளுக்கு மறுக்கப்படும் கல்வியை பெற திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடி வருகின்றன. இதேபோல ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்வி கொள்கை மீண்டும் நமக்கு குல கல்விமுறையை அறிமுகப்படுத்துவதாகவே உள்ளது. குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டது போலவே புதிய கல்வி கொள்கையும், நீட் தேர்வும் ஒழிக்கப்பட வேண்டும். கல்வி என்பது பிச்சையல்ல. அது இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமை. அந்த அரசியல் சாசனத்துக்கு எதிரானதுதான் தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை. அதை எதிர்த்து வெல்வது தான் திராவிடம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: