தமிழகத்தில் பதற்றத்தையும், வன்முறையையும் தூண்டிவிட பா.ஜ.க. திட்டமிட்டு செயல்படுகிறது: விசிக தலைவர் திருமாவளவன் சாடல்

மயிலாடுதுறை: தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், தமிழக ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சி குறிப்பிட்டார். வன்முறையை தூண்டுவதற்கு பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படும் தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகவும் திருமா கூறினார். பாஜக ஆளாத மாநிலங்களில் அதிதீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமிக்கின்றனர்.

ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக ஆதரவாளர்கள் மூலம் மதவெறுப்பை ஊக்கப்படுத்தி பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றிருந்தார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். ஆளுநரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக கட்சியை சேர்ந்த அண்ணாமலை, குஷ்பூ ஆகியோரும், தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

Related Stories: