சூலூர் அருகே சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர் கன்டெய்னர் லாரி ஏற்றி இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி: 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சூலூர்: கோவை சூலூரில் நேற்று புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை கன்டெய்னர் லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது. சினிமா பாணியில் விரட்டிச்சென்று லாரியை மடக்கிப்பிடித்து 500 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் மாதையன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தென்னம்பாளையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அதனை நிறுத்துமாறு இன்ஸ்பெக்டர் மாதையன் சைகை காட்டினார். ஆனால் நிறுத்தாமல் அவர் மீது ஏற்றுவதுபோல் வேகமாக வந்த லாரி நிற்காமல் சென்றது. இதில் அதிர்ஷ்டவசமாக இன்ஸ்பெக்டர் ஓடிச்சென்று உயிர் தப்பினார். இதைப்பார்த்த மற்ற  போலீசார் லாரியை விரட்டிச்சென்றனர்.

சுமார் 2 கிமீ தூரம் சினிமா பாணியில் விரட்டிச்சென்று லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்தவர்  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பர்கன்அலி என்பது தெரியவந்தது. லாரியை சோதனை செய்தபோது முன் இருக்கையில் இருந்த மூட்டைகளில் 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பர்கன்அலியை கைது செய்தனர்.  கன்டெய்னர் சீல் வைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பின் கன்டெய்னரை திறந்து பார்த்தால் தான் அதில் உள்ளது என்ன என்பது தெரியவரும்.

Related Stories: