நீட் விலக்கு உள்ளிட்ட 18 மசோதாக்களை முடக்கியதற்கு எதிர்ப்பு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி: மயிலாடுதுறையில் கம்யூனிஸ்ட் விசிக, விவசாய சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா உட்பட 18 மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கவர்னர் ஆன்.என்.ரவி முடக்கி வைத்துள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறையில் ரத யாத்திரை துவக்கி வைக்க வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தெலங்கானா மாநிலம் காளீஸ்வரத்தில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் வரும் 24ம் தேதி நடக்கும் புஷ்கர விழாவில் பங்கேற்கிறார். இதற்காக, தருமபுரம் ஆதீனம் நேற்று காலை 10.30 மணி அளவில் ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த ரத யாத்திரையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 18 மசோதாக்களை கவர்னர் முடக்கி வைத்துள்ளதை கண்டித்தும், ஆர்எஸ்எஸ் சிந்தனையை போற்றும் கவர்னரை, ஞானரத யாத்திரைக்கு அழைக்க கூடாது, மீறி நடத்தினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 2 டிஐஜி, 4 ஏடிஎஸ்பிக்கள், 6 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1,850 போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று காலை சிதம்பரத்தில் இருந்து காரில் சீர்காழி வழியாக மயிலாடுதுறை வந்தார். வழியில் பல இடங்களில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தருமபுரம் ஆதினம் சன்னிதானம் அருகே தனியார் கல்லூரி முன் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் பேராசிரியர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கருப்பு கொடியுடன் சாலைக்கு வந்தனர்.  

அப்போது அவர்களை பேரிகார்டு, கயிறு கட்டி தடுத்ததால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலையோரம் நின்று கவர்னரின் கார் வந்தபோது கருப்பு கொடி காட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென போலீசார் 2 வாகனங்களை, கட்சியினர் முன் நிறுத்தி மறைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர் கருப்புக் கொடி மற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தூக்கி வீசினர். கவர்னர் வாகனத்தின் பின் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடிகளும், பதாகைகளும் விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் அங்கிருந்து தருமபுர ஆதினத்துக்கு வந்த கவர்னர், பவள விழா ஆண்டு நினைவு கலையரங்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானத்திடம் ஆசி பெற்றார். தொடர்ந்து சன்னிதானம் தெலங்கானா செல்லும் ஞான ரத யாத்திரையை தொடங்கி வைத்த கவர்னர், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானத்தை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சீர்காழி வழியாக சிதம்பரம் சென்றார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாவடுதுறை ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெறுவதற்காக திருவாவடுதுறைக்கு மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் வழியாக காரில் கவர்னர் சென்றபோது திராவிடர் விடுதலை கழகத்தினர், ‘தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரே திரும்பிப்போ’ என முழக்கங்களை எழுப்பினர்.  அவர்களை போலீசார் ைகது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories: