பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம்: வீடுகளுக்கு மீன்கள் கூறு போட்டு வழங்கல்

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே மூன்று இடங்களில் மீன் பிடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பிடிக்கப்பட்ட மீன்கள் வீடுகளுக்கு கூறு போட்டு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டியில் மீன் பிடித்திருவிழா நடந்தது. பொன்னமராவதி பகுதி விவசாயம் நிறைந்த கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். அங்கு விவசாய பாசனத்திற்காக கண்மாய்கள் அதிகப்படியாக உள்ளன. இந்த கண்மாய்கள் நீர் ஆதாரமாக கொண்டு விவசாயிகள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.நெல் அறுவடைக்கு பின்னர் கோடை காலம் துவங்கிய உடன் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குறைய தொடங்கும் போது அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் கண்மாய், குளங்களில் உள்ள மீன்களை பிடித்து செல்வது வழக்கமான ஒன்றாகும். அதற்கு மீன்பிடித் திருவிழா என்றும் அழைக்கப்படும்.

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக விவசாய கண்மாய் நீர் நிலைகளில் மீன்பிடித் திருவிழா களைகட்டி வருகிறது. நேற்று தேரடி மலம்பட்டி குமார கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்யப்பட்டு வெள்ளை வீசப்பட்டது. தயாராக இருந்த பொதுமக்கள் தூரி, வலை, ஊத்தா, பரி, கச்சா மற்றும் பாத்திரங்கள், கூடைகள் மூலம் மீன்பிடித்தனர். இதில் அயிரை, கெண்டை, சிலேப்பி, குரவை விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. முன்னதாக ஊருக்காக அந்த கண்மாயில் மீன்பிடிக்கப்பட்டு அந்த மீன்கள் களை வீடு வாரியாக கூறு போட்டு அக்கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல கோவணூர் தேவன்கண்மாய், வார்ப்பட்டு பன்னீர் கண்மாய், ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் மீன்பிடித்து செல்வோர் விற்பனை செய்வது கிடையாது. அனைத்து மீன்களையும் வீடுகளில் குழம்பு வைத்து சாப்பிடுவர். இதனால் அந்த ஊர் முழுவதும் மீன் மணம் வீசும்.

Related Stories: