திருத்துறைப்பூண்டியில் ஆஸ்பத்திரி சாலையில் பாம்புகள் குடியிருக்கும் பழைய அரசு மருத்துவமனை கட்டிடம்: இடித்து அகற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி சாலையில் பயன்பாடு இல்லாத பழைய மருத்துவமனை கட்டிடத்தை இடித்து அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவில் பழைய அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. பின்னர் வேதை சாலையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அதன்பிறகு பழைய மருத்துவமனை கட்டிடம் காலியாக இருந்து வந்ததால் அந்த இடத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வந்தது. இதே இடத்தில் பள்ளிக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட நபார்டு வங்கி சுமார் ரூ.7 கோடி நிதி ஒதுங்கி டெண்டர் விடப்பட்டது. அனால் சுகாதார துறைக்கு சொந்தமான இந்த இடத்தை கல்வித்துறைக்கு மாற்றி கொடுக்காததால் ஒதுக்கிய நிதி அரசுக்கு திருப்பி சென்றுவிட்டது.

அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் முத்துப்பேட்டை சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அங்கு இயங்கி வருகிறது. ஆனால் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் இடித்து அகற்றபடவில்லை. இதனால் இந்த வளாகம் முழுவதும் பல்வேறு செடி கொடிகள் மண்டி மரம்போல் வளர்ந்து உள்ளது. இந்த பகுதியில் இருந்து விஷ வண்டுகள் தெருவுக்குள் புகுந்து குடியிருப்புகளுக்கும் வந்து விடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் ராஜேந்திரன் கூறுகையில், ஆஸ்பத்திரி தெருவில் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் மற்றும் நகருக்கும் பல்வேறு பகுதியில் இருந்து நடந்தும் வாகனத்திலும், சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் சாலையை ஒட்டி பழை அரசு மருத்துவமனை கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளதை இடித்து அப்புறப்படுத்த பல ஆண்டுகளாக கோரிக்கை அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இந்த பழைய கட்டிடத்தில் விஷ பாம்புகள் நடமாட்டம் அதிமாக உள்ளது. பாம்புகள் தெருக்கள் வழியாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே பயன்பாடு இல்லாமல் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தக்கோரி பலமுறை மனு நேரில் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்தும், பழைய மருத்துவமனை கட்டிடத்தை இடித்து அகற்ற கோரியும் வருகிற 25ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் பொதுமக்களை திரட்டி ஆஸ்பத்திரி தெரு நுழைவுவாயிலான பழைய பேருந்துநிலையம், காமராஜர் சிலை, நாகை சாலை சிட்டியூனியன் வங்கி அருகில் ஆகிய மூன்று இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

Related Stories: