கார் விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை : கார் விபத்தில் இறந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 18 வயதான  விஸ்வா தீனதயாளன் 83வது தேசிய சீனியர் போட்டியில் பங்கேற்ற ஷில்லாங் சென்ற போது கார் விபத்தில் சிக்கினார். கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் சென்று இருந்த கார் மீது எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இதில் விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டது.  விஸ்வா தீனதயாளன்  உடன் ஓட்டுநரும் உயிரிழந்தார்.காரில் இருந்த மற்ற தமிழக வீரர்கள் 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் அவர்கள் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் திரு. விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.  எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளைப் படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.  இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எத்தகைய துயரத்தை அளித்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.  அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  செல்வன். விஷ்வா தீனதயாளன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்,

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: