266வது பிறந்தநாளை முன்னிட்டு தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல், சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலைக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன், செந்தில்பாலாஜி, முத்துசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.எல்.ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், த.வேலு, பிரபாகர் ராஜா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

* முதல்வர் புகழாஞ்சலி

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளில் அவரைப் போற்றி, நாட்டு மக்களின் மேல் அக்கறையும் அன்பும் கொண்ட உண்மையான நாட்டுப்பற்றுடன் எவ்வித ஆதிக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிட உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: