ஆப்கானில் அமெரிக்க படை விட்டுச் சென்ற சாட்டிலைட் போனுடன் நடமாடும் தீவிரவாதிகள்: காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிர்ச்சி

ஸ்ரீநகர்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் பயன்படுத்திய அதிநவீன இரிடியம் சாட்டிலைட் போன் மற்றும் வை-பை தெர்மல் இமேஜரி கருவிகள் உதவியுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாடி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக சமீபகாலமாக உளவுத்தகவல்கள் எச்சரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இரிடியம் சாட்டிலைட் போன் மற்றும் வை-பை தெர்மல் இமேஜரி கருவிகளின் சிக்னல்கள் அடிக்கடி பதிவாகி வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். முதலில் வடக்கு காஷ்மீரில் தென் படத் தொடங்கிய இந்த சிக்னல்கள் தற்போது தெற்கு காஷ்மீரிலும் பதிவாகி உள்ளன.

இந்த இரிடியம் சாட்டிலைட் போன்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படையினர் பயன்படுத்தியவை. அப்படையினர் அவற்றை அங்கு விட்டுச் சென்றவையாகவோ அல்லது தலிபான்கள் மற்றும் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டதாகவோ இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதே போல், தெர்மல் இமேஜரி கருவிகள், இரவு நேரத்தில் பதுங்கி இருக்கும் மனிதர்களை கண்டறிய உதவி செய்பவை. வை-பை மூலம் இயங்கும் இவற்றின் சிக்னல்கள், என்கவுன்டர் நடந்த சில இடங்களில் பதிவாகி இருப்பதாகவும் பாதுகாப்பு படை கூறி உள்ளது.

2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத சம்பவத்துக்குப் பிறகு இரிடியம் சாட்டிலைட் போன்கள் பயன்பாடு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகள் இந்த போன்களை எல்லையில் ஊடுருவ பயன்படுத்தி வரலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் மூலம், யாரும் பீதி அடைய தேவையில்லை என்றும், சாட்டிலைட் செல்போன் சிக்னல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்துபவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என பாதுகாப்பு படை மூத்த அதிகாரிகள் கூறி  உள்ளனர்.

* ஹாட் ஸ்பாட் மூலம் சதி

காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் சமீபகாலமாக மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதையும் பாதுகாப்பு படை கண்டறிந்துள்ளது. போலீசார் சந்தேகப்படாத சாதாரண நபர்களின் மொபைல் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாகவும், இதில் சம்பந்தமில்லாத சில நபர்கள் தீவிரவாதிகள் வலையில் வீழ்ந்து விடுவதாகவும் பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: