மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்: அரக்கோணம் பயிற்சி நிறைவு விழாவில் டிஐஜி பேச்சு

அரக்கோணம்: மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும் என அரக்கோணத்தில் நடந்த பயிற்சி நிறைவு விழாவில் டிஐஜி பேசினார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த  6 மாதமாக, 316 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் நிறைவு விழா நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழிற்பாதுகாப்பு படை டிஐஜி சாந்தி ஜி.ஜெய்தேவ் கலந்துகொண்டு திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து அனைத்து பயிற்சியிலும் சிறந்து விளங்கிய கான்ஸ்டபிள் தீபக் ஈஸ்வருக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து டிஐஜி சாந்தி ஜி.ஜெய்தேவ் பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பங்கும் உள்ளது. எனவே இதில் பணியாற்றும் ஒவ்வொரு வீரரும் நாட்டிற்காக உழைக்க வேண்டும். தேசப்பற்றுடன் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். கடினமாக உழைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரருக்கும் பலவகையான துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

டிரேட்ஸ்மேன்களுக்கு கார்பென்டர், குக், மாலி, ஸ்வீப்பர் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் வீரர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் கமாண்டன்ட் கவுரவ்தோமர் உள்ளிட்ட அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: