வைகாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

ராமேஸ்வரம்: வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.

இதன்படி, வைகாசி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அக்னிதீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, வைகாசி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயிலில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு மூலவர் தரிசனம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

சதுரகிரி: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசைக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாள் என 8 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அமாவாசை தினமான இன்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்காக அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த பின், அவர்களை கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனர். அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

 

The post வைகாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல் appeared first on Dinakaran.

Related Stories: