விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்

சென்னை: விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர். கடந்த 4ம் தேதி காலை வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். பின்னர் இறுதியில் 3,80,877 வாக்குகள் பெற்ற விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்த நிலையில், சென்னையில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறுகையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஈவிஎம் எல்லாம் கிடங்கில் 45 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். வேட்பாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையம் அல்லது உயர்நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் விருதுநகர் தேமுதிக தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக கூறப்படம் தொகுதிகளில் எதிலுமே தேர்தல் ஆணையத்திற்கு இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றிப்பதற்கு வழக்கு தொடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

அதை பயன்படுத்தி கொண்டு நீதிமன்றத்தை அணுகி நீதிமன்றம் ஏதாவது உத்தரவுகள் பிறப்பிக்க முற்பட்டால் உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக தற்போது வரை எந்தவிதமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் அதற்குரித்தான முடிவுகளை அறிவிக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான புகார்கள் நாளை முதல் எடுக்கப்படும் என்பதையும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

The post விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரவில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: