திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா 20 லட்சம் பக்தர்கள் விடியவிடிய கிரிவலம்: அக்னி தலத்தில் அலைமோதிய கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர்.பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இங்கு சித்ரா பவுர்ணமி விழா 2 ஆண்டுக்கு பிறகு நேற்று கோலாகலமாக நடந்தது. சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 1.17 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

அண்ணாமலையார் கோயிலில், அதிகாலை முதல் இரவு 11 மணிவரை நடை அடைப்பு இல்லாமல், தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  ஏராளமான பக்தர்கள் திரண்டதால், கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. நள்ளிரவில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று பகலில் கடும் கோடை வெயில் சுட்டெரித்ததால் காலை 11 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. மாலை 5 மணிக்கு பிறகு மீண்டும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. வழியெங்கும் நீர், மோர், பழச்சாறு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 2,800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சித்திர குப்தனுக்கு சிறப்பு பூஜை

இறைவனின் திருமேனியில் இடபாகம் பெற்ற உமையாள், தமது திருக்கரத்தால் தீட்டிய சித்திரத்தில் (ஓவியம்) இருந்து உருவானவர் சித்திர குப்தர் என்கிறது ஆன்மிகம். சித்திரத்தின் மீது இறைவனின் மூச்சுச்காற்று படர்ந்ததால், சித்திர குப்தர் உருவான திருநாள் சித்ரா பவுர்ணமி என கூறப்படுகிறது. எனவே, அண்ணாமலையார் கோயிலில் உண்ணாமுலையம்மன்  சன்னதி எதிரில், நவக்கிரகங்களை அடுத்து அமைந்துள்ள சித்திர குப்தர் சன்னதியில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலுக்கு வந்த பக்தர்கள், சித்திர குப்தரை தரிசனம் செய்தனர்.

Related Stories: