குடியாத்தத்தில் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த கூலி தொழிலாளர்கள்

குடியாத்தம் :  மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் குட்டி சிவகாசி என  அழைக்கப்படும்  குடியாத்தம் நகரில்  முக்கிய  தொழிலாக  தீப்பெட்டி தொழில்  இருந்து  வருகின்றது. இந்நிலையில் தீப்பெட்டி  உற்பத்திக்கான  மூலப்பொருட்கள்  விலை  அதிகரித்ததால்  சில  நாட்களுக்கு  முன்  கோவில்பட்டி, விருதுநகர்  ஆகிய இடங்களில் தீப்பெட்டி  உற்பத்தி  செய்யும்  உரிமையாளர்கள்  உற்பத்தியை  நிறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக  மாநில  அளவில் நடந்த  தீப்பெட்டி   உற்பத்தியாளர்கள்  கூட்டத்தில் மூலப்பொருட்கள்  விலை ஏற்றம் காரணமாக  உற்பத்தியை  தொடர முடியாது  என  கருத்து  தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடியாத்தம் பகுதியில்  இயங்கி வரும்  15 நவீன தீப்பெட்டி  தொழிற்சாலைகள் உட்பட 50  தொழிற்சாலைகள் வரை  உற்பத்தி  நிறுத்தப்பட்டது.

இதனால் 2 ஆயிரம்  முதல் 5 வரையிலான தினக்கூலி தொழிலாளிகள்  வேலை  இழந்துள்ளனர். உற்பத்தி  நிறுத்தப்பட்டதால் வேலை  இழந்துள்ள  கூலி  தொழிலாளிகள், கொரோனா பேரிடர் முடிந்து தற்போது  தான்  சகஜ நிலைக்கு திரும்பினர். அதற்குள்  உரிமையாளர்கள்  உற்பத்தியை  நிறுத்தியது  பெரும்  அதிர்ச்சியாக  உள்ளதாகவும், தமிழக  அரசு  இதுகுறித்து நடவடிக்கை  எடுத்து வாழ்வாதாரத்தை காக்க  வேண்டும்  எனவும்  கோரிக்கை  வைத்துள்ளனர்.

மேலும் மூலப்பொருட்கள்  விலை உயர்த்தப்பட்டதை  போல தீப்பெட்டிகளின்  விலையும் உயர்த்தப்பட  வேண்டும். ஆனால்  அதுபோல  செய்யப்படவில்லை.  மேலும்  கோவில்பட்டி, விருதுநகர்  ஆகிய இடங்களில் கடந்த  சில நாட்களாக தீப்பெட்டி  உற்பத்தியை நிறுத்தி    எதிர்ப்பை பதிவு செய்து  வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக  குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தியை  நிறுத்திக்கொள்கிறோம் என உரிமையாளர்கள்  கூறினர்.

இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குடியாத்தம் பகுதி தொழிலாளிகள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அடுத்த வேளை உணவுக்கு அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு விரைந்து இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என தொழிலாளிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Related Stories: