டீசல் விலை உயர்வால் நிதி சுமை: ஆந்திராவில் பஸ் கட்டணம் கிடு கிடு உயர்வு.! ரூ.10 வரை அதிகரிப்பு

திருமலை: டீசல் விலை உயர்வால் நிதி சுமை ஏற்பட்டுள்ளதால், ஆந்திராவில் ரூ.2 முதல் ரூ.10 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் துவாரகா திருமலையில் கூறியதாவது: குக்கிராமங்களுக்கும் பயண வசதியை வழங்கவும், தொலைதூர பகுதிக்கான சேவைகளை இயக்கிய பெருமையையும் ஆந்திரா அரசு போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது. 11,271 பஸ்களில் தினமும் 41 லட்சம் கி.மீ இடைவிடாமல் இயக்கப்பட்டு 45 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். கொரோனாவால் மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை வருவாயில் ₹5,680 கோடி சரிவு ஏற்பட்டது. தினசரி செலவுகளால் நிறுவனத்தின் மீது மேலும் சுமை அதிகரித்தது.

பொருளாதார நிலை மாறி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமல் சேவை வழங்கப்பட்டது. டிக்கெட் விலை கடைசியாக 11 டிசம்பர் 2019 அன்று உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.67 ஆக இருந்தது. இன்று ரூ.107க்கு விற்கப்படுகிறது. 2019 முதல் தற்போது வரை டீசல் விலை ரூ.40 அதிகரித்துள்ளது. டீசல் விலை 60 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழகத்திற்கு கடுமையான நிதி சுமை ஏற்பட்டுள்ளது. பஸ்களில் பராமரிப்புக்கு தேவையான டயர், உதிரிபாகங்கள் போன்றவற்றின் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க டிக்கெட் கட்டணத்தை சற்று உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு இயக்கப்படும் பல்லேவெலுகு, நகர பகுதியில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் ரூ.2ம், எக்ஸ்பிரஸ், சிட்டி மெட்ரோ எக்ஸ்பிரஸ், மெட்ரோ டீலக்ஸ் சேவைகளுக்கு ரூ.5ம், சூப்பர் சொகுசு மற்றும் ஏசி சேவைகளுக்கு ரூ.10ம் கூடுதலாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் இன்று (14ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. பல்லேவெலுகு மற்றும் சிட்டி ஆர்டினரி சேவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ரூ.720 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனாலும் ஏற்கனவே உள்ள இழப்பை இது சரி செய்யாது. இந்த கட்டண உயர்வுக்கு பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பஸ் கட்டண உயர்வுக்கு ஆந்திராவில் பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: