காட்பாடியில் போலீசார் அதிரடி சோதனை எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் வந்து நின்ற அகர்த்தலாபெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா வழியாக வடமாநிலங்களில் இருந்து கேரளா, கர்நாடகம், தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

ரயில்கள் மட்டுமின்றி ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் மூலமாகவும் கஞ்சா கடத்தல் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. பெரும்பாலும் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வேலூர், திருவள்ளூர், சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாகவே தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக கஞ்சா கொண்டு வரப்படுகிறது.இவ்வாறு கடத்தி வரப்படும் கஞ்சாவை ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார், ரயில்வே பாதுகாப்புப்படையினர், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கூட்டாகவும், தனித்தனியாகவும் அவ்வபோது கைப்பற்றுவதுடன், குற்றவாளிகளையும் கைது செய்கின்றனர்.

அதேபோல் நேற்று முன்தினம் மாலை சுமார் 4.15 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு திரிபுரா மாநிலம் அகர்த்தலாவில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் வரை செல்லும் ஹாம்சாபார் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் காட்பாடி ரயில்வே சிறப்பு எஸ்ஐ ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பி16 பயணிகள் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டனர். அதில் 5 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்த முயன்ற ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: