மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2வது சுற்றில் மாரின் சிலிக், ஹியூபர்ட் ஹர்காஸ்

மான்டே கார்லோ: குரோஷியாவின் மாரின் சிலிக் மற்றும் போலந்தின் இளம் வீரர் ஹியூபர்ட் ஹர்காஸ் ஆகியோர் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 23ம் இடத்தில் உள்ள மாரின் சிலிக்குடன், பிரான்சின் ஜோ வில்ஃபிரைட் சோங்கா மோதினார். 69 நிமிடங்கள் மட்டுமே நடந்த இப்போட்டியில் சிலிக் 6-2, 6-2 என நேர் செட்களில் சோங்காவை வீழ்த்தினார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு பின்னர் ஓய்வு பெற உள்ளதாக சோங்கா ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு போட்டியில் ஏடிபி தரவரிசையில் தற்போது 14ம் இடத்தில் உள்ள போலந்தின் இளம் டென்னிஸ் நட்சத்திரம் ஹியூபர்ட் ஹர்காசும், தரவரிசையில் 90வது இடத்தில் உள்ள பொலிவியாவின் ஹியூகோ டெல்லியனும் மோதினர். இதில் ஹர்காஸ் 7-5, 6-4 என நேர் செட்களில் டெல்லியனை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories: