ஆற்காடு அருகே நள்ளிரவு துணிகரம் செல்போன் டவரில் 24 பேட்டரிகள் திருட்டு-ஆரணியை சேர்ந்த 2 பேர் கைது

ஆற்காடு : ஆற்காடு அருகே தனியார் செல்போன் டவரில் 24 பேட்டரிகளை திருடிய வழக்கில் ஆரணியை சேர்ந்த 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள வளையாத்தூரில்  தனியார் செல்போன் டவர் உள்ளது.  அதிலிருந்து  24 பேட்டரிகளை கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ₹19,500. இது குறித்து அந்த செல்போன் நிறுவன டவர்  பராமரிப்பு அதிகாரி ராகவன் திமிரி  போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திமிரி போலீசார் பஜார் வீதி உட்பட பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செல்போன்  டவரில் இருந்த பேட்டரிகளை திருட முயற்சி செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(37), அவரது உறவினர் அச்சுதன்(26) என்பது தெரியவந்தது. இதில் சுரேஷ் அந்த தனியார் செல்போன் நிறுவனத்தில் கேபிள் ஒயர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருவதும், அச்சுதன் ஆட்டோ டிரைவராக உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே வளையாத்தூர் தனியார் செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: