ஆதிதிராவிடர் நலத்துறையில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி ஆன்லைன் மூலம் மட்டுமே இனி கவுன்சலிங்

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையில், முதல்முறையாக வார்டன்களுக்கு ஆன்லைன் மூலம் கவுன்சலிங் மூலம் பணிமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன. அடுத்ததாக ஆசிரியர்கள் பணிமாற்றமும் ஆன்லைன் கவுன்சலிங் மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் எந்த துறையை எடுத்தாலும், பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை உருவானது. இதனால் திமுக ஆட்சி வந்ததும், நேர்மையான, ஒளிவு மறைவற்ற ஆட்சி நடத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாக ஆதிதிராவிடர் நலத்துறையில் பொதுமக்களுக்கு எளிதான வகையில் உதவிகள் கிடைக்கும், அந்த துறையில் உள்ள பள்ளிகள், விடுதிகளில் தரமான கல்வி, உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அத்துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், துறையின் செயலாளர் மணிவாசன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் விடுதிகள் உள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு பணி மாற்றமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு செய்யப்பட்டன. இந்த முறை ஆன்லைன் கவுன்சலிங் முறையிலேயே பணி மாறுதல் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வார்டன்களுக்கான பணி மாறுதல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆன்லைனில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி, காலிப் பணியிடங்களில் பணி மாறுதல், கவுன்சலிங் முறையில் நடைபெற்றது. அதில் 754 வார்டன்கள் கவுன்சலிங்கில் பங்கேற்றனர். அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக பணம் வாங்காமல் ஆன் லைன் கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டது. அதேபோல, ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் விரைவில் ஆன் லைன் கவுன்சலிங் மூலம் வழங்கப்பட உள்ளது.

Related Stories: