பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்ட்ரல் - மயிலாப்பூர் இடையே மினி பேருந்து: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் - மயிலாப்பூர் இடையே மினி பஸ் இயக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, இந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் நேற்று நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மினி பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு,  மாநகராட்சி 9வது மண்டல குழு தலைவர் மதன்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த மினி பஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பல்லவன் இல்லம், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட், மேற்கு கூவம் சாலை, டேம்ஸ் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, அஜந்தா, வள்ளுவர் சிலை வழியாக மயிலாப்பூர் வரை இயக்கப்படுகிறது.  சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 6.20, 7.55, 9.30, 11.05, 12.40, 14.25, 16.00, 17.35, 19.10, 20.45 ஆகிய நேரங்களிலும், மயிலாப்பூரிலிருந்து 7.05, 8.40, 10.15, 11.50, 13.25, 15.10, 16.45, 18.20, 19.55, 21.30 ஆகிய நேரங்களிலும் தலா 10 முறை இந்த மினி பஸ் இயக்கப்படும்.

Related Stories: