சசிகலாவை நீக்கியது செல்லும் என தீர்ப்பு எதிரொலி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை: தலைவர்கள் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை நீதிமன்றம் நேற்று பிற்பகல் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து நேற்று மாலை சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வந்து ஆலோசனை நடத்தினர். தீர்ப்பையடுத்து அதிமுக தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார்.

சசிகலா பொதுச்செயலாளராக தேந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் பதவியையும் கைப்பற்ற முடிவு செய்தார். இதையடுத்து அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக பதவியேற்க தன்னை அழைக்கும்படி கவர்னருக்கு சசிகலா தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், கவர்னர் அவரை பதவியேற்க அழைக்கவில்லை. பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகி இருந்தார். சசிகலா சிறைக்கு சென்றதும், மத்திய பாஜ தலைவர்கள் முயற்சியால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையிலான அரசில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, கட்சியை வழிநடத்தி வந்தனர்.

அதேநேரம், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாகவும் அறிவித்தனர். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்றே கூறி வந்தார். மேலும், தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீது சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இதில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்றும் சசிகலா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து அதிமுக தலைவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பின்னர் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி,கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைமை கழக நிர்வாகிகள் வந்தனர். அப்போது, ‘‘நீதிமன்ற தீர்ப்பையொட்டி இனி அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இனி சசிகலாவை அதிமுக கட்சியில் சேர்க்கும்படி யாரும் வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

Related Stories: