உக்ரைன் போரில் அடி மேல் அடி புதிய ராணுவ தளபதியை நியமித்தார் புடின்: டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற அதிரடி வியூகம்

கீவ் : உக்ரைனுடனான போரில் தொடர்ந்து  பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் புதிய ராணுவ தளபதியை ரஷ்ய அதிபர் புடின் நியமித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற புதிய தளபதியின் கீழ் அதிரடி திட்டம் வகுப்பப்பட்டுள்ளது. உக்ரைன் எதிரான 7 வாரங்களாக நடந்து வரும் போரில், அந்நாட்டின் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரங்களாக கார்கிவ், இர்பின், மரியுபோல், செர்னிவ், புச்சா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்ற முடியாமல் பின்வாங்கி உள்ளது. இந்த நகரங்களில் கடுமையான சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியது. குறிப்பாக, புச்சாவில் அப்பாவி மக்கள் கொடூரமாக கொன்று புதைத்து உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ரஷ்யாவின் போர் குற்றங்களுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுக்கு அமெரிக்க, நேட்டோ உள்ளிட்ட உலக நாடுகள் அயுத உதவி செய்து வருவதால், ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், ரஷ்யா டாங்கிகள், ராணுவ தளவாடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக, உக்ரைன் நாட்டை இரண்டாக பிரித்து, கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசிக்கும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ரஷ்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த பிராந்தியத்தை தங்களது படைகளால் சுற்றிவளைத்து உள்ளது.  

பல நகரங்களை கைப்பற்றுவதில் ஏற்பட்ட தோல்வியை போன்று, டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் திட்டத்தில் தோல்வியை தழுவ கூடாது என்பதில் ரஷ்யா கவனமாக உள்ளது. இந்நிலையில், போரை வழிநடத்த புதிய ராணுவ தளபதியாக ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தளபதியான ஜெனரல் அலெக்ஸாண்டர் ட்வார்னிகோவை ரஷ்ய அதிபர் புடின் நியமித்துள்ளார். உக்ரைன் போருக்கு தலைமை தாங்கும் வகையில் ரஷ்ய படைக்கு இதுவரை தளபதி நியமனம் செய்யப்படவில்லை. தொடர்ந்து, ஏற்பட்டு வரும் பின்னடைவு மற்றும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட உள்ள தாக்குதலுக்கு வழிநடத்த தளபதி  நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலெக்சாண்டர் கடந்த 2015ம் ஆண்டு சிரியா உள்நாட்டு போரின் போது, அங்கு  சென்ற ரஷ்ய படைக்கு தலைமை தாங்கியவர். அப்போது ரஷ்ய வீரர்களால்  ஏராளமான  அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மிக முக்கியமான நாட்கள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘போரில் அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை. ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் விரிவான போரை நடத்த வாய்ப்புள்ளது. இது போரில் மிக முக்கியமான கட்டம் ஆகும். போர்க்குற்றங்களை செய்துள்ள ரஷ்யா அதை ஒப்புக்கொள்ள தயங்குகிறது. அந்த நாடு அரக்கத்தனமாக மாறிவிட்டது. ஆனால் தங்கள் தவறுகளை ரஷ்யா ஒப்புக்கொள்ளும் காலம் நிச்சயம் வரும். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு மேலும் உதவ வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

* உக்ரைன் பொருளாதாரம் 45.1% வீழ்ச்சியடையும்

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா படையெடுப்பால் இந்த ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 45.1 சதவீதம் வீழ்ச்சியடையும். கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கொரோனா  தொற்றுநோயால் ஏற்பட்டதைவிட பெரிய பொருளாதார சேதம் ஏற்படும். பொருளாதார தடைகள், ரஷ்யாவிலும் மந்தநிலைக்கு வழிவகுத்துள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 11.2% சுருங்கும்’ என்று தெரிவித்துள்ளது.

* அகதிகளை அரவணைக்கும் கன்னியாஸ்திரிகள்

மேற்கு உக்ரைனின் லிவிவ் நகருக்கு அருகே உள்ள ஹோஷிவ் கிராமத்தில் கிரேக்க கத்தோலிக்க பிரிவை சேர்ந்த துாய குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இதில் 17 கன்னியாஸ்திரிகள் வசித்து வருகின்றனர். தற்போது, போரில் வீடு, உடமைகளை இழந்த அகதிகள் பலர் கன்னியாஸ்திரிகள் மடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை கன்னியாஸ்திரிகள் வழங்கி உள்ளனர்.

* விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை அழிப்பு

உக்ரைன் டினிப்ரோ நகரின் தெற்கு பகுதியில் உக்ரைன் தனது வான் பாதுகாப்புக்கு வைத்திருந்த நான்கு எஸ்.300 ரக ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும், 25 உக்ரைன் வீரர்களும் கொல்லப்பட்டனர் என்றும் ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். விமானங்களை தாக்கி அழிக்கும் எஸ்.300 ரக ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. ஸ்லோவேக்கியா நாடு இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது. ஆனால் இந்த ஏவுகணைகள் அழிக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் தங்களுக்கு தெரியாது என்று ஸ்லோவேக்கியா தெரிவித்துள்ளது.

Related Stories: