போலி விண்ணப்பதாரர்களுக்கு கடும் தண்டனை கொரோனா இழப்பீடு பெற கால நிர்ணயம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி கவுரவ்குமார் பன்சால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நோய் தொற்று விவகாரத்தில் இழப்பீட்டை விண்ணப்பித்தவுடன் உடனடியாக பரிசீலனை செய்து மாநில அரசுகள் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பான ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்துள்ளது. அதில், ‘கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு முன்னதாக உயிரிழந்தோர் குடும்பங்கள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதேப்போன்று மேற்கண்ட தேதிக்கு பின்பாக ஏற்பட்ட கொரோனா உட்பட பிற உயிரிழப்புகள் ஏற்பட்ட குடும்பங்கள் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்க இறந்த தேதியிலிருந்து 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் யாராவது போலியாக உரிமை கோரியிருப்பது தெரிய வந்தால், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 52ன்படி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கப்படும். இவை அனைத்தும் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த கால நிர்ணயம் மற்றும் விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

6 பேர் மட்டுமே பலி

ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா காரணமாக புதிதாக 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,132 ஆக அதிகரித்துள்ளது.

* கேரள மாநிலத்தில் 5 பேர், டெல்லியில் ஒருவர் என 6 மட்டுமே உயிரிழந்துள்ளார். வேறு எந்த மாநிலம், யூனியன் பிரதேசத்திலும் கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகவில்லை. பலி எண்ணிக்கை 5,21,691 ஆக உயர்ந்துள்ளது.

* இதுவரை 185.74 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: