ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி வருகிறது ஒரு வாரமாக சுற்றித்திரியும் ஒற்றை யானையால் புளி மகசூலில் இறங்கிய தொழிலாளர்கள் அச்சம்

ஆம்பூர் : ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி ஒரு வாரமாக சுற்றித்திரியும் ஒற்றை யானையால் கால்நடை மேய்ப்பவர்களும், புளி மகசூலில் இறங்கியுள்ள தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ளது துருகம் காப்பு காடுகள். இந்த காப்பு காடுகளில் ஊட்டல் தேவஸ்தானத்தை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் கூறுகின்றனர்.

ஊட்டல் தேவஸ்தானம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாழும் கலை அமைப்பின் தன்னார்வலர்கள் அப்போதைய கலெக்டர் ராமன் தலைமையில் ஜம்பூட்டல் நீர்நிலையை தூர் வாரினர். இப்போது அந்த ஜம்பூட்டலில் நீர் நிறைந்து காணப்படுகிறது.துருகம் வனப்பகுதியில் கோடைகாலம் என்பதால் பல்வேறு நீர்நிலைகள் இப்போது வறண்டு காணப்படுகின்றன. ஜம்பூட்டல் பகுதியில் மட்டும் நீர் நிறைந்து இருப்பதால், வன விலங்குகள் பறவைகள் தண்ணீர் தேடி இங்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில் துலுக்கன் குட்டை, தொம்மக்குட்டை, பொட்டி வீட்டு கொல்லை, பொழிச்சனேரி, மேக்கல பண்டை போன்ற பல பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று கடந்த ஒரு வார காலமாக சுற்றி வருவதாகவும், அது அன்றாடம் தண்ணீர் தேடி ஜம்பூட்டல் பகுதிக்கு வந்து போவதாகவும் கூறுகின்றனர்.இந்த ஒற்றை யானை நடமாட்டத்தால், காப்பு காடுகள் பகுதிகளில் புளியமர மகசூலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள், கால்நடை மேய்ப்பவர்கள் அச்சமடைந்து காட்டுக்குள் செல்வதை இப்போது தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி தொழிலாளர்கள் கூறுகையில், ‘கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒற்றை யானை நடமாட்டம் இருந்தது. பின்னர் யானையின் நடமாட்டம் இல்லை. தற்போது ஒரு வாரமாக மீண்டும் ஒற்றை யானை நடமாட்டம் இருக்கிறது. வனப்பகுதியில் யானை பிளிறும் சத்தம், மரக்கிளைகளை முறிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது.  இதனால் புளி மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே விவசாய நிலங்களில் யானைகள் புகுந்துவிடாதபடி, வனப்பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை அமைத்து கோடைக்காலத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: