நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி பதில்

சிவகாசி: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாமக  கூட்டணி வைத்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு, ‘‘தேர்தல் வரும்போது முடிவு  செய்வோம்’’ என்று அன்புமணி கூறினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் நேற்று பங்கேற்ற பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி எம்பி அளித்த பேட்டி: தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். பட்டாசு சிவகாசியின் பிரச்னை இல்லை.  

தமிழகத்தின் பிரச்னை. பசுமை பட்டாசு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பட்டாசு பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு  தீர்வு காண வேண்டும். சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். விருதுநகர் பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.  வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சாதி பிரச்னை இல்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயமும் முன்னுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைத்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு, ‘‘தேர்தல் வரும்போது முடிவு செய்வோம்’’ என்று அன்புமணி பதில் கூறினார்.

Related Stories: