தமிழகத்தை அதிர வைத்த தாக்குதல்; வீரப்பன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி: 29 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ வைத்த மரியாதை

மேட்டூர்: சந்தன கடத்தல் வீரப்பன் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 29 ஆண்டுகளுக்குப்  பிறகு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக-கர்நாடக எல்லைப்பகுதி காடுகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமரக்கடத்தலில் தனிசாம்ராஜ்யம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவன் சந்தன வீரப்பன். அவரை தேடுவதற்காக அமைக்கப்பட்ட வனரோந்து காவல்படையினர் (ஜங்கிள்பெட்ரோல்) அப்போதைய காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொளத்தூர் வாரச்சந்தையில் வீரப்பன் கூட்டாளிகள், எஸ்பி கோபாலகிருஷ்ணனுக்கு சவால் விட்டு போஸ்டர் ஒட்டினார்கள். இதனையடுத்து அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி எஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வனரோந்து காவல் படையினரும் போலீஸ் இன்பார்மர்களும் வனத்துறையினரும் வனப்பகுதியில் வீரப்பன் தேடுதல் வேட்டை நடத்தினர். தமிழக-கர்நாடக எல்லையில் மேட்டூரை அடுத்துள்ள சுரக்காமடுவு வனப்பகுதிக்கு இரண்டு போலீஸ் வாகனங்களில் சென்றனர். அப்போது வீரப்பன் 14 இடங்களில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி வெடித்து சிதறியது.

இதில் சிக்கிய 22  பேர்  சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். இதில் போலீஸ் இன்பார்மர்கள் 15 பேரும், காவல்துறையினர் 5 பேரும், வனத்துறையினர் இருவரும் உயிரிழந்தனர். தமிழக-கர்நாடக மாநிலங்களை உலுக்கிய இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணனும் அவரது உதவியாளர் கிளைமன்சும் உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் நடைபெற்று 29 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி உயிரிழந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், இன்பார்மர்களுக்கு நேற்று (9ம் தேதி) கண்ணிவெடி வெடித்த இடமான சுரைக்காய்மடுவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது வனரோந்து காவல் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார்,  தற்போது பணியில் இருக்கும் காவல் துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், காவல் உதவி ஆய்வாளர் துரைசாமி மற்றும் அப்போது வன ரோந்து காவல் படையில் இருந்த காவல்துறையினரும், உயிரிழந்த இன்பார்மர் குடும்பத்தினரும் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஏழாவது கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸ் வாகனம் சென்றபோதுதான், அவை ஒரே நேரத்தில் வெடித்தது. அந்த இடத்தில் உறவினர்களும், நண்பர்களும் மலர்கள் தூவி, மாலை அணிவித்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர். வீரப்பன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 29 ஆண்டுகளுக்கு பிறகு, வன ரோந்து காவல் படையினர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: